Saturday, 15 June 2013

மருதாணி

ரிசப்ஷன் டெஸ்க்கில் உட்கார வேண்டிய பெண் சாப்பிடப் போயிருக்கிறாள் போலும்.

EPABX செட்டிங் செய்தவர்கள் ரிசப்ஷன் டெஸ்க்கிலே ஆறு தரம் ரிங் அடித்தபின்பும் போன் எடுக்கவில்லையானால், வேறு டெஸ்கிற்கு கால் ட்ரான்ஸ்பர் ஆகும்படிக்கு வைத்திருந்தார்கள்
அந்த விதிக்கு கட்டுப்பட்டு என் டெஸ்கிலே போன் அடித்தது

"வணக்கம் ----கம்பெனிங்களா"
தனியார் கம்பெனிகளுக்கு வரும் போனில் தமிழைக் காண்பது அபூர்வம்.. அதிலும் வணக்கம் சொல்லி தமிழில் பேசுவது ரொம்ப அபூர்வம்.. பதினைந்து வருஷ அரசாங்க சேவை சகவாசம், மறுமுனை வணக்கத்தில் இருந்த அரசாங்க வாசனையினை அடையாளம் சொன்னது

"வணக்கம்.. ஆமாம் சொல்லுங்க"

"சார் நான் வேப்பூர் போலிஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் பேசறேன்"

"வேப்பூரிலிருந்தா.. போலிஸ் ஸ்டேஷனிலிருந்தா ?"

"ஆமாம் சார்.. இங்கே மெட்ராஸ் ஹவேயிலே ஒரு ஆக்சிடண்ட்.. ஆள் ஸ்பாட்டுல காலி.. பாக்கெட், பேக் எல்லாத்துலயும் தேடிப் பார்த்தோம்.. உங்க கம்பெனி ஐடி கார்டு இருந்தது.. பேரு சத்யநாராயணன்.. வேற அட்ரஸ் எதுவும் இல்லை.. ட்ரைவிங் லைசென்ஸ்ல சென்னை அட்ரஸ் இருக்கு.. நீங்க மேல் விபரம் சொல்லனும்.. பையன் சின்ன வயசு"

"சார் எனக்கு குழப்பமா இருக்கு.. விசாரிச்சுட்டு உங்களை நானே பத்து நிமிஷத்துல கால் பண்றேன்.. உங்க செல் நம்பர் தாங்க.. அந்த ஐடி கார்டுல ஒரு நம்பர் போட்டிருக்கும் அதைச் சொன்னீங்கன்னா எங்க டேட்டா பேஸ்ல தேட சௌகரியமாக இருக்கும்.. என்னோட செல் நம்பரும் தரேன்.. நீங்க என்னை நேரடியாக் கூப்பிடலாம்"

எம்ப்ளாயி ஐடி தந்து என்டர் தட்டியவுடன் சாஃப்வேர் தன் விசுவாசத்தைக் காட்டியது.. அந்தப் பையன் வேலை செய்யும் ப்ராஜெக்ட்டில் இருக்கும் இன்னொருத்தனை அழைத்தேன்.. "

"சத்திய நாராயணன் இன்னிக்கு வந்திருக்காராப்பா"

"இல்லை சார்.. அவன் லீவு திருச்சி போயிருக்கான்.. அதான் நேட்டிவ்.. என்ன சார் எதும் விஷயம் சொல்லனுமா"

" ஒரு சங்கடமான சமாச்சாரம்.. உங்க ஹெல்ப்பும் வேணும்.. --------------------------------------------- நீங்க அந்த பையன் ப்ராஜக்ட் மேட் நாலஞ்சு பேர்.. உடனே என்னோட வரணும்.. நான் கார் ஏற்பாடு பண்றேன்.. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பனும்... "

"அய்யய்யோ என்ன சார் சொல்றீங்க.. ரொம்ப நல்ல பையன் சார்.."

"எனக்கும் இன்னமும் முழுசா விபரம் தெரியாது.. எப்படி ஆக்சிடண்ட்.. என்னனு ஒன்னும் தெரியல.. அது சத்தியநாராயணன் தான் அப்படினு ஊர்ஜிதம் செய்துக்கத்தான் போன் பண்ணினேன்.. நீங்க நாலஞ்சு பேர் ரெடியாகி அங்கேயே இருங்க .. நானே கொஞ்ச நேரத்துல போன் பண்றேன்.."

"திருச்சியிலிருந்து பைக்ல வந்திருக்கார் சார்.. சைட் ரோட்லேர்ந்து ஒரு பெரிய சைஸ் லாரி ராங் சைட்லே மெயின் ரோட்டுக்கு ஏறிருக்கு.. அதனாலே பைக்கை ராங் சைடுக்கு திருப்பிருக்காரு.. எதிர் சைட்லே வேகமா வந்த லாரி இடிச்சிருக்கு.. மண்டைலே அடி.. அந்த இடம் இங்கே வேப்பூர் தாண்டி, பைபாஸ் ஆரம்பிக்குது பாருங்க அந்த இடம்.. அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப்பு.. அங்கே பஸ்ஸுக்கு நின்னுட்டு இருந்தவங்க.. ஓடிப் போய் பார்ந்திருக்காங்க.. ஆனா ஸ்பாட் ஔட். அங்கேர்ந்து ஒருத்தர் தான் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி சொன்னார்.. எஸ் ஐயும் நானும் தான் ஸ்பாட்டுக்கு போனம்.. எஸ் ஐ பாடியை ஆம்புலன்ஸ் வச்சி விருதாச்சலம் கொண்டு போறாரு.. நான் ஸ்டேஷன் வந்து உங்களுக்கு விபரம் சொன்னேன்.. நீங்க அந்தப் பையன் பேரன்ட்ஸுக்கு சொல்லிட்டீங்களா"

"இன்னமும் பையன் வீட்டுக்கு சொல்லல.. பக்குவமா சொல்லனும்..நீங்க எதுக்கும் எஸ் ஐ நம்பர் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. அவர் கிட்ட பேசறேன்"
தாம்பரம் தாண்டியிருந்த போது தான் எஸ் ஐ லைனில் சிக்கினார்

" சார்..நானு -------------------.. அந்தப் பையனோட கொலிக்ஸ் ஒரு அஞ்சு பேர் சேர்ந்து, கார்ல வந்துட்டு இருக்கோம்.. இப்பதான் ஸ்டேஷனுக்குப் பேசினன்.. விருதாச்சலம் ஜி. ஹெச்சுக்கு பாடி போஸ்ட் மார்டம் பார்மாலிட்சுக்கு நீங்க போய்ட்டு இருக்கீங்கனு சொன்னாங்க"

"ஆமாம் சார்.. நான் விருதாச்சலம் வந்துட்டன்.. ஜி ஹெச்ல தான் இருக்கேன்.. நீங்க இங்கே வர எவ்ளோ நேரம் ஆகும்"

"இப்பதான் தாம்பரம் தாண்டறேன்"

"சரி வாங்க நான் வெயிட் பண்றேன்.. பையன் வீட்டுக்கு சொல்லனுமே.. சொல்லிட்டீங்களா"

"இல்ல சார் .. பையன் அப்பா மொபைல் நம்பர் வாங்கிருக்கேன்.. கான்ஃப்ரன்ஸ் பண்ணட்டுமா.. நீங்களும் பேசினா கொஞ்சம் நல்லாருக்கும்"

விருதாச்சலம் பெரியாஸ்பத்திரி அந்த சந்தில் இருப்பதாக வழி சொன்னார்கள்.

பெயிண்ட் உதிர்ந்து போன வளைவான போர்டு, அது தான் பெரியாஸ்பத்திரி என்று சொன்னது.. வேப்ப மர நிழலில், வெள்ளைக் கலர் வேன்.. அதில் படிந்திருந்த தூசி ., அது ரொம்ப நாளைக்கு அங்கே நின்று கொண்டிருக்க வேண்டும் எனச் சொன்னது. அப்புறம் தான் கவனித்தேன். வண்டி டயரெ இல்லாமல்.. ஆழமாக பதிந்து நின்று கொண்டிருந்தது.

வேப்பம் பழம் நிறைய சிதறியிருந்தது.. காற்றிலே ஒரு மாதிரி மருந்து வாசனை இருந்தது..

"எஸ் ஐ சார்.. நாங்க வந்துட்டம்.. நீங்க எங்க இருக்கீங்க"

"இப்பதான் டீ சாப்பிடலாம்னு வெளில வந்தேன்.. வந்துடறேன்..நீங்க அங்க வாசல்லயே இருங்க"

மார்ச்சுவரிக்குப் போகும் சின்ன சந்து, புல்வெட்டப்படாமல் இருந்தது.. சுவரோரம் குப்பைத் தொட்டி நிரம்பி மருந்து பாட்டில்கள் சுதந்திரமாக இருந்தன. இருட்டத் தொடங்கியிருந்த சமயம் .. அந்த சந்து திரும்பின போது இருபதடி தூரத்தில், நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் " பிணவறை" தெரிந்தது.. அந்த இடத்திலே நிறைய மூத்திர வாசனை இருந்தது
பெரிய சைஸ் கதவுக்கு, ரொம்ப சின்ன சைஸிலே பூட்டு போட்டிருந்தார்கள்..

மார்ச்சுவரிக்கு காவல் இருந்தவருக்கு சின்ன வயசு சாவுகளின் மீதும், இப்படி சின்ன வயசுப் பிணங்களுக்கு காவல் இருப்பதிலும் சோகம் ஜாஸ்தி இருந்தது..
"சட்ட பேண்ட் எதும் கிழியல சாமி.. அப்படியே பொட்டாட்டமா இருக்கான் புள்ளை.. யார் பெத்த புள்ளையோ இங்கே அனாதையா வந்து விறச்சுப் போய் கிடக்கு"

சொன்னது போலவே சட்டை கிழியவில்லை.. ஜீன்ஸ் பேன்ட்.. பின் மண்டையிலே காயம்.. ரத்த சேதம்,, அந்த சிமென்ட் பெஞ்ச் தாண்டி தரையெல்லாம் ரத்தம்..
என்னுடைய அகாதமிக் நினைவுகளில் கொஞ்ச நேரம் பட்டினத்தார், சிவவாக்கியர் எனவும் பெரும் நேரம் ஜெய்சிங் பி மோடியின் Medical jurisprudence ம் வந்து போயினர்

'சார் நான் சி எம் ஓ கிட்ட பேசிட்டன்.. போஸ்ட் மார்டம் காலைல தான்.. இந்த ப் பையனோட சித்தப்பா பேசினார்.. வந்திட்டிருக்கார்.. பையன் அப்பா ஹார்ட் பேஷண்ட்டாம்.. அவராலே வெளில தங்க முடியாதுனு சித்தப்பா வரார். உங்க நம்பர் தந்திருக்கே அவர்கிட்ட .. கூப்பிடறதா. நீங்க கூட இங்க ரூம் எடுத்து தங்கிருங்க.. காலல பத்து மணிக்கு ஃபார்மாலிட்டீஸ் முடிச்சி பாடி வாங்கிரலாம்.. நானே வரேன் காலைல.. "

மிச்சமிருக்கும் வேலைகளுக்கு ஒத்தாசையாக மரணச் சான்றிதழில் பச்சை மை அத்தாட்சியில் சத்ய நாராயணன் இன்ன தேதியிலே இன்ன இடத்திலே நடந்த சாலை விபத்தின் காரணமாக மூளையிலே காயம் உண்டாகி,, அதிக ரத்தம் சேதாரமாகி என்பதான மெடிக்கல் பாஷையில் சாதாரணமானவர்களின் பாஷையில் செத்துப் போயிருந்தான்

மலைக்கோட்டையின் சரிவுகளில் மழைத் தண்ணீர் இன்னமும் வழிந்து கொண்டிருந்தது தூரத்தில் இருந்து தெரிந்தது.. ரொம்ப சின்ன சந்திலே இருந்தது அந்த வீடு..
ஒரே பையன்.. சின்னவீடு,, ஒரு நாள் ராத்திரி கிடைத்த அவகாசத்தில் எத்தனை தூரத்திலிருந்தோ வந்து நிரம்பிருந்த சொந்தங்கள்

முகம் மட்டும் தெரிகின்றாற் போல் ஆஸ்பத்திரியில் கட்டியிருந்த துணி விலக்கி வைத்திருந்தார்கள்

"ராஜம்.. நம்ம சத்தியா வேலை செய்ற ஆபிசிலேர்ந்து ஆபிசர் வந்திருக்கார் "

அகாலமாக இறந்து போன ஒரு சின்ன வயசுப் பையனின் அம்மாவுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு ஆறுதல் சொல்வதற்கு வழி இல்லாமல் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிமிஷங்களைக் கரைத்தேன்..

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு அந்த அம்மாவின் கண்களைப் பார்த்தேன். கொஞ்சம் கூட ஈரம் இல்லை.. அழுது வறண்டு போயிருக்கலாம்.. முகம் வீங்கியிருந்தது..

புடவைத் தலைப்புகள் மூடியிருந்த இரண்டு கையையும் எடுத்து நீட்டினாள்.. மருதாணிக் கறை.. வெள்ளைக் கைக்கு அந்த சிவப்பு அதிகம் தெரிந்தது
:நேத்திக்கு எங்க கலியாண நாள்.. கார்த்தாலே பொறப்படும் போது சத்தியாதான் மருதாணி வச்சி விட்டான்.. மெட்ராஸ் போனவுடனே போன் செய்வேன் அப்புறம் தான் அழிக்கணும்னு சொன்னான்,, போற வழிலேயே திரும்பி வந்துட்டான். ஆத்துக்குள்ள கூட குழந்தையைக் கொண்டு வரலே.. வெராண்டாவிலேயே வச்சிருக்கா இன்னமும் மருதாணி மிச்சமிருக்கு..

சின்ன சைஸ் கிண்ணம் ஒன்று எடுத்து நீட்டினாள்.. லேசாக பச்சைக் கலவையாக உள்ளே ஈரம் கொஞ்சம் மிச்சமிருந்த மருதாணி

இன்றைக்கும் எங்கே மெஹந்தி கோன் பார்த்தாலும்
கொஞ்ச நேரம் பட்டினத்தார், சிவவாக்கியர் ஜெய்சிங் பி மோடியின் Medical jurisprudence ம் ஒரு எவர்சில்வர் கிண்ணமும் நினைவுக்கு வந்து சங்கடம் செய்கிறது

(அக்டோபர் 17 , 2012)