Saturday 15 June 2013

கரடி

மெயிலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஜி எம் போனில் கூப்பிட்டார், " என்ன கண்ணன் சந்தோஷமா"

"சார் ரொம்ப சந்தோஷம்.. நான் போனவாரம் மீட்டிங்கிற்கு அங்க வந்த போது கூட நீங்க எனக்கு சொல்லவில்லையே சார்.. இப்ப ரொம்ப சர்ப்ரைசிங்கா இருக்கு"

" இது ஒரு மாசம் முன்னாலே சேர்மனே எடுத்த முடிவு.. நான் இதிலே ஏதும் செய்யலை.. ஜெர்மனி ப்ராஜெக்ட் ப்ரொஷெக்ஷன் , வொர்க்கிங் ஷீட் இதெல்லாம் யாரு பண்ணினதுனு கேட்டார்.. ஒரு டீம் வொர்க் சார்னு சொன்னேன்.. ஆனாலும் யாரோட டீம்னு கேட்டார்.. உங்க பேர் சொன்னேன்.. அதுக்கப்புறம் அவரே சில தகவல்களை சேகரிச்சிருக்கார்.... ஒரு நாள் என்னிடம் பெர்சனலாகக் கேட்டார்.. நானும் சரின்னேன்.. அத்தினி தான் கண்ணன்.. இது உங்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமஷன் தான்.. யு டிசர்வ் இட்"

"ரொம்ப தாங்கஸ் சார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு .. அதுவும் ஒரு மாசம் ட்ரெயினிங் அப்படினு சொல்லிருக்காங்க.. இனிமே தான் சார் வீட்டுக்கே சொல்லனும்"

"உங்க எக்சைட்மென்ட் எனக்குப் புரியுது கண்ணன்.. சந்தோஷமா இருங்க.. முதல்ல ஃபேமிலிகிட்ட ஷேர் பண்ணிக்கோங்க.. அடுத்த வாரமே ட்ரெயினிங் ஆரம்பிக்கலாம்.. நீங்க எதுவும் பண்ண வேண்டாம்.. லாஜிஸ்டிக்கல் ஏற்பாடெல்லாம் பார்த்துப்பாங்க.. ஆல் தி பெஸ்ட் எகெய்ன்"

அப்பா போனை எடுத்தார்..

"அப்பா அம்மாவைக் கூப்பிடுங்கப்பா.."

" அம்மாவும் ராஜியும் இங்கெ பக்கத்துல கடை வரைக்கும் போயிருக்காங்கப்பா .. என்ன விஷயம் சொல்லுப்பா"

" நான் அம்மா கிட்ட முதலிலே சொல்லிட்டு, மறுபடி போன் பண்றேன்.. நான் ராஜி செல் ஃபோனுக்குப் பண்றேன்பா"

வீடு திரும்பும் போது, மூவரிடமும் கணக்கில்லாத சந்தோஷம் தெரிந்தது..

"ஏம்பா எத்தனை நாள் ட்ரெயினிங் எந்த ஊர்லே.. "
ரெண்டு மாசம் .. டார்ஜிலிங் பக்கத்துலப்பா.. "

" அக்காமடேஷன் எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா"

"அங்கே ப்ராஜெக்ட் கெஸ்ட் ஹவுஸ் இருக்காம்பா.. நான் பெங்களூர் ப்ராஞ்சுக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே ஒருத்தர் நாலு மாசம் முன்னாலே போயிருந்தார்.. அவர்கிட்டயே பேசினேன்.. இடம் ரொம்ப நல்லா இருக்குமாம்.. கெஸ்ட் ஹௌஸ்லே எல்லா வசதியும் இருக்குனு சொன்னார். "

"ஏங்க இங்கேர்ந்து டார்ஜிலிங்கிற்கு டைரக்ட் ஃப்ளைட்டா"

"டார்ஜிலிங்கிலே ஏது ஏர்ப்பொர்ட்.. இங்கேர்ந்து கொல்கத்தா.. அங்கேர்ந்து பக்தோரானு ஊருக்கு ஃப்ளைட் மாறனும்.. அங்கேர்ந்து 120 கிமீ கார்லே போகணுமாம்"

கெஸ்ட் ஹவுசிலே எல்லா வசதியும் இருக்கத்தான் செய்தது.. ரொம்ப விசாலமான அறை.. அங்கேயே சாப்பிடக் கிடைக்கும்படிக்கு ஆள் போட்டிருந்தார்கள்.. அந்த சமையல் ஆசாமிக்கு சமையல் மட்டுமில்லாமல் எல்லாம் தெரிந்திருந்தது.

"சார் உங்களுக்கு நாளையிலிருந்து தானே ஆபிஸ் வேலை தொடங்குகிறது.. இன்றைக்கு நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.. ரூமிலேயே போன் இருக்கிறது.. அங்கே ஒரு சின்ன புத்தகம் இருக்கும்.. அதிலே முக்கியமான் போன் நம்பர் எல்லாம் இருக்கிறது.. என்னுடைய மொபைல் நம்பரும் இருக்கிறது.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம்"

ரூமிலிருந்து மலை, தவழும் மேகம் எல்லாம் நன்றாகத் தெரிகிறது.. டேட்டா கார்டு வேலை செய்யுமா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல், நன்றாகவே வேலை செய்தது.

போனுக்குப் பக்கத்திலே இருந்த சின்ன புத்தகத்தில் அந்த சின்ன ஊரின் எல்லா போன் நம்பரும் இருக்கும் போலிருக்கிறது..

ஒரு பக்கத்திலே கரடி படம் போட்டு நாலு போன் நம்பர் தந்திருந்தார்கள் என்னவெனத் தெரியவில்லை.

மறுநாள் உற்சாகமாகத் தயாரானான்.. ரூமுக்கே காலை
டிபன் வந்தது..

"ஆமாம் அந்த டெலிபோன் புத்தகத்திலே கரடி படம் போட்டிருக்கிறதே என்ன விஷயம்".

"நீங்களும் கவனித்து விட்டீர்களா.. அதொன்றுமில்லை.. இந்தப் பக்கத்து காட்டிலே கரடிகள் இருக்கின்றன.. அவை சமயத்தில் இங்கே வந்துவிடும்.. அவற்றை லாவகமாகப் பிடித்துக் கொண்டு போக இங்கே சில கம்பெனிகள் இருக்கின்றன .. அவர்களின் நம்பர் தான் அது"

"என்னது கரடி வருமா"

"சார் பயப்படாதீர்கள்.. அடிக்கடி வராது.. எப்பவாவது வரும்.. ஆனால் அவர்கள் மிகவும் லாவகமாகப் பிடித்து விடுவார்கள்

முதல் நாள் ட்ரெயினிங்கில் எல்லாம் கரடியாகத் தெரிந்தது.. ஒருவழியாக 6 மணிக்கு முடித்தார்கள்.. ஒரு டப்பா காரிலே கெஸ்ட் ஹவுஸில் இறக்கி விட்டார்கள்.

மெதுவாக மாடிப்படியேறி வந்து ரூம் கதவைத் திறந்தால், சந்தேகமில்லாமல் ஒரு கரடி ஜன்னல் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.

வேர்வை, மூச்சு முட்டுதல், அட்ரிலின் இதெல்லாம் கொஞ்ச நேரம் ஓவர் டைம் செய்தது..

" இதோ பாருங்கள்.. நான் இந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து பேசுகிறேன்.. என் ரூமில் கரடி இருக்கிறது"

" நீங்கள் போகும் போது ஜன்னலைத் திறந்து வைத்து விட்டுப் போனீர்களா"

மறு முனை ஆசாமிக்கு கரடி இங்கிருந்து துரத்தப்படுவதைக் காட்டிலும் கரடி எப்படி வந்தது என்பதில் கவனம் அதிகமிருந்தது

ஒரு வழியாக வருவதாகச் சொல்லி வந்து விட்டான்.. அவன் தனியாக வரவில்லை . சுருக்கு கயிறு, சங்கிலி, துப்பாக்கி, ஒரு பெரிய சைஸ் நாய்..

"ஆமாம் கரடி எங்கே"

"மாடியில் என் ரூமிலே இருக்கிறது"

"ரொம்ப பெரிசா"

"நான் கரடி பார்ப்பது இது இரண்டாம் முறை"

" ஓ இதற்கு முன்பே நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றீர்களா"

" மிஸ்டர் நான் முதலில் கரடியை எங்கள் ஊர் ஜூ விலே பார்த்தேன்"

" ஓ ஐம் சாரி"

ஆமாம் அது தான் துப்பாக்கி வைத்திருக்கின்றீர்களே . பின்னர் ஏன் இந்த கயிறு சுருக்கு சங்கிலி இதெல்லாம்.. ஒரே தரம் சுட்டு வீழ்த்த வேண்டியது தானே"

"சார் கரடியை சுட்டு சாகடித்து விட்டால் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆசாமிகள் என் மீது கேஸ் போடுவார்கள்.. நியாயமாகப் பார்த்தால், இந்த வேலைக்கு அவர்கள் தான் வர வேண்டும்.. போனால் போகிறதென என்னை கரடி பிடிக்க விட்டுருக்கின்றார்கள்"

"அப்புறம் துப்பாக்கி எதற்கு.."

"நீங்கள் நினைப்பது போலில்லை.. இது மயக்க மருந்தை கரடிக்கு செலுத்தும் துப்பாக்கி .. ஜஸ்ட் ட்ராங்க்விலைசர் கன்"

"ஓ இதை வைத்து சுட்டால் கரடி எத்தனை நேரத்தில் மயங்கும்"

"சார் இதென்ன கேள்வி.. சுட்ட உடனே மயங்கியாக வேண்டும்.. நாம் சுட்டு சில நிமிஷங்கள் கழித்து மயங்கம் என்றால் கரடி நம்மை கோபத்தில் தாக்கி விடாதா.. "

"கரெக்ட் கரெக்ட்.. ஆமாம் மருந்து போதுமான அளவு இருக்கா"

"கவலைப்படாதீர்கள்.. எனக்கு இதிலே ஐந்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது.. அதுவுமில்லாமல் இதிலே இப்போ வைத்திருக்கும் மருந்து Etorphine என்று பெயர்.. வழக்கமாக காட்டு யானைகளை மயக்கம் செய்ய சுடுவது.. இந்தக் கரடிகளும் பாருங்கள்.. உயரம் கம்மியாக இருந்தாலும் பருமனாக அதிக பாரம் கொண்டவை பாருங்கள்.. அவைகளுக்கும்.. இப்படி ஸ்ட்ராங்கான மருந்து தேவையாகிறது.."
வந்தவன் காரியக்காரனாக இருக்க வேண்டும்..

"அது தான் இந்த மருந்தால் கரடி மயங்கி விடுமே .. பின்னர் எதற்கு சங்கிலி கயிறு எல்லாம்"

"சார் மயங்கிய கரடியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டா போவது.. தூக்கி ஒரு லாரியில் வைத்து கொண்டு போக வேண்டும்.. "

"லாரி எங்கே"

"லாரி பின்னாலே வந்து கொண்டிருக்கிறது.. நாம் சுட்டு கரடி மயக்கமானவுடன் அதனை சங்கிலி கயிறு எல்லாம் வைத்து கை காலை அசைக்க முடியாத மாதிரி கட்டி விடணும்.. பின்னர் லாரியில் வரும் ஆட்கள் அதை தூக்கிப் போட்டுக் கொண்டு போவார்கள்"

" ஆமாம் இந்த நாய் எதற்கு"

"சொல்கிறேன்.. ஆமாம் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்களா.. அல்லது கரடி சுடுவதைப் பார்க்க விருப்பமா"

" விபரீதமாக ஏதும் ஆகிவிடாதே"

" என்ன விபரீதமாக ஆகப் போகிறது.. ரூம் கதவைத் திறக்கப் போகிறோம்.. அதிலிருந்து இரண்டே விநாடிகள் தான்,, நான் சுட்டு விடுவேன்.. பின்னர் அரை மணி நேரம் தான்.. கரடியைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.. உங்கள் ரூம் உங்களுக்கே"

" இன்னுமொரு கரடி வந்தால்"

"அதெல்லாம் வராது.. வாருங்கள் உங்கள் ரூமைக் காண்பியுங்கள்"

"ஆமாம் இந்த நாய் எதற்கு"

" ஓ அதுவா.. சில சமயம் மருந்து வேலை செய்யாமல் போகும் அபாயம் உண்டு.. அந்த சமயம் கரடி பெரும் சப்தம் போட்டுக் கொண்டு.. தாக்க வரும்.. இந்த நாய்க்கு நாங்கள் நல்ல பயிற்சி தந்திருக்கிறோம்"

'என்ன பயிற்சி.... அதுவும் நாய்க்கு கரடி புடிக்கும் இடத்தில்"

"அதுவா.. அந்த சந்தர்ப்பத்தில் கரடி மிகவும் மூர்க்கமாக இருக்கும்.. அதனை வீழ்த்துவது ரொம்ப கஷ்டம் பாருங்கள்.. அதனால் இந்த நாய்க்கு கரடியின் மர்ம ஸ்தானத்தை கவ்விப் பிடிக்கும் படி பயிற்சி தந்திருக்கிறோம்"

"எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.. ஆமாம் உங்கள் பெயர் கூட கேட்டுக் கொள்ளவில்லை.. ஐம் கண்ணன்.. "

“ என் பெயர் ஆதர்ஷ்"
 

ஆஸ்பத்திரியில் கண்ணன் அரை மயக்கத்தில் இருந்தாலும் , டாக்டரிடம் ஆதர்ஷ் பேசுவது அவனுக்கு லேசாகக் கேட்டது

"அது ஒன்றுமில்லை டாக்டர்.. ரூமுக்குள் போகும் வரைக்கும் ஒன்னுமில்லை.. கரடி ஒன்னும் பண்ணலை.. சுட்ட உடனே மயங்கி விட்டது.. கண்ணன் சார் தான் பெரிசா சப்தம் போட்டு கத்திட்டார்.. இந்த நாய்க்கு சப்தம் வச்சி ட்ரெயின் பண்ணிருந்தமா அதான் இப்படி ஆய்டுச்சு"

(செப்டம்பர் 1 , 2012)

மருதாணி

ரிசப்ஷன் டெஸ்க்கில் உட்கார வேண்டிய பெண் சாப்பிடப் போயிருக்கிறாள் போலும்.

EPABX செட்டிங் செய்தவர்கள் ரிசப்ஷன் டெஸ்க்கிலே ஆறு தரம் ரிங் அடித்தபின்பும் போன் எடுக்கவில்லையானால், வேறு டெஸ்கிற்கு கால் ட்ரான்ஸ்பர் ஆகும்படிக்கு வைத்திருந்தார்கள்
அந்த விதிக்கு கட்டுப்பட்டு என் டெஸ்கிலே போன் அடித்தது

"வணக்கம் ----கம்பெனிங்களா"
தனியார் கம்பெனிகளுக்கு வரும் போனில் தமிழைக் காண்பது அபூர்வம்.. அதிலும் வணக்கம் சொல்லி தமிழில் பேசுவது ரொம்ப அபூர்வம்.. பதினைந்து வருஷ அரசாங்க சேவை சகவாசம், மறுமுனை வணக்கத்தில் இருந்த அரசாங்க வாசனையினை அடையாளம் சொன்னது

"வணக்கம்.. ஆமாம் சொல்லுங்க"

"சார் நான் வேப்பூர் போலிஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் பேசறேன்"

"வேப்பூரிலிருந்தா.. போலிஸ் ஸ்டேஷனிலிருந்தா ?"

"ஆமாம் சார்.. இங்கே மெட்ராஸ் ஹவேயிலே ஒரு ஆக்சிடண்ட்.. ஆள் ஸ்பாட்டுல காலி.. பாக்கெட், பேக் எல்லாத்துலயும் தேடிப் பார்த்தோம்.. உங்க கம்பெனி ஐடி கார்டு இருந்தது.. பேரு சத்யநாராயணன்.. வேற அட்ரஸ் எதுவும் இல்லை.. ட்ரைவிங் லைசென்ஸ்ல சென்னை அட்ரஸ் இருக்கு.. நீங்க மேல் விபரம் சொல்லனும்.. பையன் சின்ன வயசு"

"சார் எனக்கு குழப்பமா இருக்கு.. விசாரிச்சுட்டு உங்களை நானே பத்து நிமிஷத்துல கால் பண்றேன்.. உங்க செல் நம்பர் தாங்க.. அந்த ஐடி கார்டுல ஒரு நம்பர் போட்டிருக்கும் அதைச் சொன்னீங்கன்னா எங்க டேட்டா பேஸ்ல தேட சௌகரியமாக இருக்கும்.. என்னோட செல் நம்பரும் தரேன்.. நீங்க என்னை நேரடியாக் கூப்பிடலாம்"

எம்ப்ளாயி ஐடி தந்து என்டர் தட்டியவுடன் சாஃப்வேர் தன் விசுவாசத்தைக் காட்டியது.. அந்தப் பையன் வேலை செய்யும் ப்ராஜெக்ட்டில் இருக்கும் இன்னொருத்தனை அழைத்தேன்.. "

"சத்திய நாராயணன் இன்னிக்கு வந்திருக்காராப்பா"

"இல்லை சார்.. அவன் லீவு திருச்சி போயிருக்கான்.. அதான் நேட்டிவ்.. என்ன சார் எதும் விஷயம் சொல்லனுமா"

" ஒரு சங்கடமான சமாச்சாரம்.. உங்க ஹெல்ப்பும் வேணும்.. --------------------------------------------- நீங்க அந்த பையன் ப்ராஜக்ட் மேட் நாலஞ்சு பேர்.. உடனே என்னோட வரணும்.. நான் கார் ஏற்பாடு பண்றேன்.. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பனும்... "

"அய்யய்யோ என்ன சார் சொல்றீங்க.. ரொம்ப நல்ல பையன் சார்.."

"எனக்கும் இன்னமும் முழுசா விபரம் தெரியாது.. எப்படி ஆக்சிடண்ட்.. என்னனு ஒன்னும் தெரியல.. அது சத்தியநாராயணன் தான் அப்படினு ஊர்ஜிதம் செய்துக்கத்தான் போன் பண்ணினேன்.. நீங்க நாலஞ்சு பேர் ரெடியாகி அங்கேயே இருங்க .. நானே கொஞ்ச நேரத்துல போன் பண்றேன்.."

"திருச்சியிலிருந்து பைக்ல வந்திருக்கார் சார்.. சைட் ரோட்லேர்ந்து ஒரு பெரிய சைஸ் லாரி ராங் சைட்லே மெயின் ரோட்டுக்கு ஏறிருக்கு.. அதனாலே பைக்கை ராங் சைடுக்கு திருப்பிருக்காரு.. எதிர் சைட்லே வேகமா வந்த லாரி இடிச்சிருக்கு.. மண்டைலே அடி.. அந்த இடம் இங்கே வேப்பூர் தாண்டி, பைபாஸ் ஆரம்பிக்குது பாருங்க அந்த இடம்.. அந்த இடம் ஒரு பஸ் ஸ்டாப்பு.. அங்கே பஸ்ஸுக்கு நின்னுட்டு இருந்தவங்க.. ஓடிப் போய் பார்ந்திருக்காங்க.. ஆனா ஸ்பாட் ஔட். அங்கேர்ந்து ஒருத்தர் தான் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி சொன்னார்.. எஸ் ஐயும் நானும் தான் ஸ்பாட்டுக்கு போனம்.. எஸ் ஐ பாடியை ஆம்புலன்ஸ் வச்சி விருதாச்சலம் கொண்டு போறாரு.. நான் ஸ்டேஷன் வந்து உங்களுக்கு விபரம் சொன்னேன்.. நீங்க அந்தப் பையன் பேரன்ட்ஸுக்கு சொல்லிட்டீங்களா"

"இன்னமும் பையன் வீட்டுக்கு சொல்லல.. பக்குவமா சொல்லனும்..நீங்க எதுக்கும் எஸ் ஐ நம்பர் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. அவர் கிட்ட பேசறேன்"
தாம்பரம் தாண்டியிருந்த போது தான் எஸ் ஐ லைனில் சிக்கினார்

" சார்..நானு -------------------.. அந்தப் பையனோட கொலிக்ஸ் ஒரு அஞ்சு பேர் சேர்ந்து, கார்ல வந்துட்டு இருக்கோம்.. இப்பதான் ஸ்டேஷனுக்குப் பேசினன்.. விருதாச்சலம் ஜி. ஹெச்சுக்கு பாடி போஸ்ட் மார்டம் பார்மாலிட்சுக்கு நீங்க போய்ட்டு இருக்கீங்கனு சொன்னாங்க"

"ஆமாம் சார்.. நான் விருதாச்சலம் வந்துட்டன்.. ஜி ஹெச்ல தான் இருக்கேன்.. நீங்க இங்கே வர எவ்ளோ நேரம் ஆகும்"

"இப்பதான் தாம்பரம் தாண்டறேன்"

"சரி வாங்க நான் வெயிட் பண்றேன்.. பையன் வீட்டுக்கு சொல்லனுமே.. சொல்லிட்டீங்களா"

"இல்ல சார் .. பையன் அப்பா மொபைல் நம்பர் வாங்கிருக்கேன்.. கான்ஃப்ரன்ஸ் பண்ணட்டுமா.. நீங்களும் பேசினா கொஞ்சம் நல்லாருக்கும்"

விருதாச்சலம் பெரியாஸ்பத்திரி அந்த சந்தில் இருப்பதாக வழி சொன்னார்கள்.

பெயிண்ட் உதிர்ந்து போன வளைவான போர்டு, அது தான் பெரியாஸ்பத்திரி என்று சொன்னது.. வேப்ப மர நிழலில், வெள்ளைக் கலர் வேன்.. அதில் படிந்திருந்த தூசி ., அது ரொம்ப நாளைக்கு அங்கே நின்று கொண்டிருக்க வேண்டும் எனச் சொன்னது. அப்புறம் தான் கவனித்தேன். வண்டி டயரெ இல்லாமல்.. ஆழமாக பதிந்து நின்று கொண்டிருந்தது.

வேப்பம் பழம் நிறைய சிதறியிருந்தது.. காற்றிலே ஒரு மாதிரி மருந்து வாசனை இருந்தது..

"எஸ் ஐ சார்.. நாங்க வந்துட்டம்.. நீங்க எங்க இருக்கீங்க"

"இப்பதான் டீ சாப்பிடலாம்னு வெளில வந்தேன்.. வந்துடறேன்..நீங்க அங்க வாசல்லயே இருங்க"

மார்ச்சுவரிக்குப் போகும் சின்ன சந்து, புல்வெட்டப்படாமல் இருந்தது.. சுவரோரம் குப்பைத் தொட்டி நிரம்பி மருந்து பாட்டில்கள் சுதந்திரமாக இருந்தன. இருட்டத் தொடங்கியிருந்த சமயம் .. அந்த சந்து திரும்பின போது இருபதடி தூரத்தில், நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் " பிணவறை" தெரிந்தது.. அந்த இடத்திலே நிறைய மூத்திர வாசனை இருந்தது
பெரிய சைஸ் கதவுக்கு, ரொம்ப சின்ன சைஸிலே பூட்டு போட்டிருந்தார்கள்..

மார்ச்சுவரிக்கு காவல் இருந்தவருக்கு சின்ன வயசு சாவுகளின் மீதும், இப்படி சின்ன வயசுப் பிணங்களுக்கு காவல் இருப்பதிலும் சோகம் ஜாஸ்தி இருந்தது..
"சட்ட பேண்ட் எதும் கிழியல சாமி.. அப்படியே பொட்டாட்டமா இருக்கான் புள்ளை.. யார் பெத்த புள்ளையோ இங்கே அனாதையா வந்து விறச்சுப் போய் கிடக்கு"

சொன்னது போலவே சட்டை கிழியவில்லை.. ஜீன்ஸ் பேன்ட்.. பின் மண்டையிலே காயம்.. ரத்த சேதம்,, அந்த சிமென்ட் பெஞ்ச் தாண்டி தரையெல்லாம் ரத்தம்..
என்னுடைய அகாதமிக் நினைவுகளில் கொஞ்ச நேரம் பட்டினத்தார், சிவவாக்கியர் எனவும் பெரும் நேரம் ஜெய்சிங் பி மோடியின் Medical jurisprudence ம் வந்து போயினர்

'சார் நான் சி எம் ஓ கிட்ட பேசிட்டன்.. போஸ்ட் மார்டம் காலைல தான்.. இந்த ப் பையனோட சித்தப்பா பேசினார்.. வந்திட்டிருக்கார்.. பையன் அப்பா ஹார்ட் பேஷண்ட்டாம்.. அவராலே வெளில தங்க முடியாதுனு சித்தப்பா வரார். உங்க நம்பர் தந்திருக்கே அவர்கிட்ட .. கூப்பிடறதா. நீங்க கூட இங்க ரூம் எடுத்து தங்கிருங்க.. காலல பத்து மணிக்கு ஃபார்மாலிட்டீஸ் முடிச்சி பாடி வாங்கிரலாம்.. நானே வரேன் காலைல.. "

மிச்சமிருக்கும் வேலைகளுக்கு ஒத்தாசையாக மரணச் சான்றிதழில் பச்சை மை அத்தாட்சியில் சத்ய நாராயணன் இன்ன தேதியிலே இன்ன இடத்திலே நடந்த சாலை விபத்தின் காரணமாக மூளையிலே காயம் உண்டாகி,, அதிக ரத்தம் சேதாரமாகி என்பதான மெடிக்கல் பாஷையில் சாதாரணமானவர்களின் பாஷையில் செத்துப் போயிருந்தான்

மலைக்கோட்டையின் சரிவுகளில் மழைத் தண்ணீர் இன்னமும் வழிந்து கொண்டிருந்தது தூரத்தில் இருந்து தெரிந்தது.. ரொம்ப சின்ன சந்திலே இருந்தது அந்த வீடு..
ஒரே பையன்.. சின்னவீடு,, ஒரு நாள் ராத்திரி கிடைத்த அவகாசத்தில் எத்தனை தூரத்திலிருந்தோ வந்து நிரம்பிருந்த சொந்தங்கள்

முகம் மட்டும் தெரிகின்றாற் போல் ஆஸ்பத்திரியில் கட்டியிருந்த துணி விலக்கி வைத்திருந்தார்கள்

"ராஜம்.. நம்ம சத்தியா வேலை செய்ற ஆபிசிலேர்ந்து ஆபிசர் வந்திருக்கார் "

அகாலமாக இறந்து போன ஒரு சின்ன வயசுப் பையனின் அம்மாவுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு ஆறுதல் சொல்வதற்கு வழி இல்லாமல் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிமிஷங்களைக் கரைத்தேன்..

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு அந்த அம்மாவின் கண்களைப் பார்த்தேன். கொஞ்சம் கூட ஈரம் இல்லை.. அழுது வறண்டு போயிருக்கலாம்.. முகம் வீங்கியிருந்தது..

புடவைத் தலைப்புகள் மூடியிருந்த இரண்டு கையையும் எடுத்து நீட்டினாள்.. மருதாணிக் கறை.. வெள்ளைக் கைக்கு அந்த சிவப்பு அதிகம் தெரிந்தது
:நேத்திக்கு எங்க கலியாண நாள்.. கார்த்தாலே பொறப்படும் போது சத்தியாதான் மருதாணி வச்சி விட்டான்.. மெட்ராஸ் போனவுடனே போன் செய்வேன் அப்புறம் தான் அழிக்கணும்னு சொன்னான்,, போற வழிலேயே திரும்பி வந்துட்டான். ஆத்துக்குள்ள கூட குழந்தையைக் கொண்டு வரலே.. வெராண்டாவிலேயே வச்சிருக்கா இன்னமும் மருதாணி மிச்சமிருக்கு..

சின்ன சைஸ் கிண்ணம் ஒன்று எடுத்து நீட்டினாள்.. லேசாக பச்சைக் கலவையாக உள்ளே ஈரம் கொஞ்சம் மிச்சமிருந்த மருதாணி

இன்றைக்கும் எங்கே மெஹந்தி கோன் பார்த்தாலும்
கொஞ்ச நேரம் பட்டினத்தார், சிவவாக்கியர் ஜெய்சிங் பி மோடியின் Medical jurisprudence ம் ஒரு எவர்சில்வர் கிண்ணமும் நினைவுக்கு வந்து சங்கடம் செய்கிறது

(அக்டோபர் 17 , 2012)